இத்திருத்தலம் மூவரால் பாடல் பெற்றது. (திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்). திருச்சி மாநகரின் வடக்கு பகுதியில் காவிரி கொள்ளிடம் புண்ணியநதி சூழ்ந்த பகுதியில் கம்பீரமாக அமைந்துள்ள திருக்கோயில், ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான நீர், (அப்பு) ஸ்தலமாக இத்திருத்தலம் வழிபாடு செய்யப்படுகிறது. நாவல் மரக்காட்டில், ஜம்பு ரிஷியாலும், அம்பிகையாலும், வழிபாடு செய்யப்பட்டவர் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர். யானையும் சிலந்தியும் இத்தலத்தில் இறைவனை வழிபாடு செய்து மோட்சம் பெற்றுள்ளது. பிரம்மா இத்தலத்தில் பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து இறைவன், இறைவியின் தரிசனம் பெற்று ஸ்திரீ பாவ விமோசனம் பெற்றார். அன்னை அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீசக்கரங்களை தாடகங்களாக அணிவித்துக் கொண்டு அருள்பாலிக்கின்றார்.